எண்ணூர் சிறுகுடா
எண்ணூர் சிறுகுடா வங்காள விரிகுடாவின் கோரமண்டல் கரையில் சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள உப்பங்கழி ஆகும். இது உப்பங்கழிகளும் காயல்களும் மிகுந்த பகுதியில் அவற்றை வங்காள விரிகுடாக் கடலுடன் இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. 4 கி.மீ.2 பரந்துள்ள இப்பகுதியில் இக்குறுங்குடா 2.25 கி.மீ.2 பரப்பளவில் உள்ளது. இது சென்னை நகரிலிருந்து 20 கி.மீ. வடக்கிலும் எண்ணூர் துறைமுகத்திற்கு தெற்கே 2.6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இச்சிறு குடா கடலினுள் 3 கி.மீ.க்கு நீண்டுள்ளது; கடலோரமாக 5 கி.மீ. தொலைவிற்கு பரந்துள்ளது. இதன் அகலம் ஏறத்தாழ 400 மீட்டராக உள்ளது. அலையாத்தித் தாவரங்கள் நிறைந்திருந்த சதுப்புக் காடாக இருந்த இவ்விடம் மாந்தக் குடியேற்றங்களினால் தற்போது திட்டாக உள்ளது. எண்ணூர் சிறுகுடாவின் ஆழம் 1 to 2 மீட்டராக உள்ளது; கடல் முகத்துவாரத்தில் ஆழம் குறைவாக உள்ளது.


